Skip to main content

புயலினால் மரம் விழுந்த இடங்களில் பெரிய மரங்களை...

சென்னை,

புயலினால் மரம் விழுந்த இடங்களில் பெரிய மரங்களை நடவேண்டும் என்று முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் நடிகர் விவேக் நேரில் வலியுறுத்தியுள்ளார்.

மரங்களுக்கு ஏற்பட்ட சேதம்
சென்னையில் தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை, நடிகர் விவேக் நேற்று சந்தித்து பேசினார்.

பின்னர் நிருபர்களுக்கு விவேக் அளித்த பேட்டி வருமாறு:-
மரியாதை நிமித்தமாக முதல்-அமைச்சரை சந்தித்துப் பேசினேன். வார்தா புயலால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூரில் மரங்களுக்கு ஏற்பட்ட சேதம் பற்றி அவரிடம் கூறினேன்.
அதோடு மீன்பிடி படகுகள், மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. சென்னையில் மட்டும் 30 ஆயிரம் மரங்கள் முறிந்துவிட்டன. ஆயிரம் ஆண்டு காலம் நின்ற அரச மரம், ஆலமரமும் சாய்ந்துவிட்டன.
முதல்-அமைச்சர் உறுதி
எனவே, பெரிய மரங்களை நடுவதற்கு தமிழக அரசு முன்வரவேண்டும் என்று அவரை கேட்டுக்கொண்டேன். பெரிய மரங்களை நட்டால் முறையான பராமரிப்பு மூலம் ஒரு ஆண்டுக்குள் அவை வளர்ந்துவிடும். இதுபற்றி வனத்துறை உள்பட சம்பந்தப்பட்ட துறைகளிடம் தெரிவிப்பதாக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி அளித்தார்.
கிரீன் கலாம் திட்டம் மூலம் 2010-ம் ஆண்டு முதல் மரம் நட்டு வருகிறேன். 27 லட்சத்து 73 ஆயிரம் மரங்கள் நட்டுள்ளேன். இதற்கு பலர் உதவி செய்கின்றனர். மரத்தின் பெருமைகளை அதை இழந்தபோதுதான் தெரிந்துகொள்கிறோம்.

பெரிய மரங்கள்
வெளிநாட்டு மரங்களால் இங்குள்ள மண்ணுக்கு தாக்குப்பிடிக்க முடியவில்லை. பெரிய வாகை மரங்கள்கூட அடியோடு முறிந்துபோய்விட்டன. எனவே, உள்நாட்டு வாகை மரங்கள், வேம்பு, புன்னை மரங்கள் போன்றவற்றை நடலாம்.

மரங்கள் விழுந்த இடத்தில் பெரிய மரங்களை நடவேண்டும் என்பது தமிழக அரசுக்கு நான் வைக்கும் கோரிக்கையாகும். புயல் சீரமைப்பு பணிக்கு பிறகு இதை செய்வதாக கூறியுள்ளனர்.

Comments